பழைய போன் வாங்கி ஏமாற வேண்டாம், ஒரே எஸ்எம்எஸ்ஸில் கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

இந்தியாவில் பழைய அல்லது செகண்ட் ஹேண்ட் மொபைல் போன்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த விலையில் நல்ல போன் கிடைப்பது ஒரு வரம்தான். ஆனால், நீங்கள் வாங்கும் அந்த மொபைல் ஒருவேளை திருட்டு மொபைலாக இருந்தால், அது உங்களை பெரிய சட்டச் சிக்கலில் மாட்டிவிடும். இந்தக் கவலையைத் தீர்க்க, மத்திய அரசு ஒரு எளிய வழியை வழங்கியுள்ளது. ஒரே ஒரு எஸ்எம்எஸ் மூலம் அதைச் சரிபார்க்கலாம்.

நீங்கள் வாங்க விரும்பும் பழைய மொபைல் திருட்டு போன்தானா அல்லது நல்ல போன்தானா என்பதை அதன் IMEI எண்ணை வைத்து எளிதாகக் கண்டறியலாம். முதலில், அந்த மொபைலின் IMEI எண்ணை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, அந்த மொபைலின் டயல் பேடில் *#06# என்று டைப் செய்தால், திரையில் 15 இலக்க IMEI எண் தோன்றும். அதை குறித்துக்கொள்ளுங்கள்.

இப்போது, உங்கள் மொபைலில் இருந்து KYM என டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் (இடைவெளி) விட்டு, நீங்கள் குறித்து வைத்த 15 இலக்க IMEI எண்ணைப் பதிவு செய்யுங்கள். (உதாரணம்: KYM 123456789012345). இந்த மெசேஜை 14422 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இது மத்திய தொலைத்தொடர்புத் துறையின் CEIR (Central Equipment Identity Register) வழங்கும் அதிகாரப்பூர்வ சேவையாகும்.

எஸ்எம்எஸ் அனுப்பிய சில நொடிகளில் உங்களுக்கு ஒரு பதில் வரும். அதில் மொபைல் பற்றிய விவரங்கள் சரியாக இருந்து, ‘Blacklisted’ (கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது) அல்லது ‘Duplicate’ (போலியானது) போன்ற எந்த எச்சரிக்கையும் இல்லை என்றால், அது பாதுகாப்பான மொபைல். ஒருவேளை அப்படிப்பட்ட எச்சரிக்கை வந்தால், அந்த மொபைலை வாங்குவதை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

எனவே, அடுத்த முறை நீங்கள் பழைய மொபைல் வாங்கும் போது இந்த எளிய சோதனையைச் செய்ய மறக்காதீர்கள். இந்த ஒரு சிறிய எஸ்எம்எஸ், உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, தேவையற்ற சட்டப் பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காப்பாற்றும். தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தி, எப்போதும் விழிப்புடன் இருந்து பாதுகாப்பான பொருட்களை வாங்குவது மிகவும் அவசியமாகும்.