இனி டீக்கடை நடத்தவும் லைசென்ஸ், அரசின் புதிய உத்தரவால் வெடித்தது சர்ச்சை

தமிழக கிராமப்புறங்களில் உள்ள சிறு இட்லி, டீ கடைகள் போன்ற வணிகங்களுக்கு இனி வணிக உரிமம் கட்டாயம் என்ற திமுக அரசின் புதிய அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட ‘தமிழ்நாடு கிராம ஊராட்சி (தீங்கு விளைவிக்கும் மற்றும் அருவருப்பான தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குதல்) விதிகள், 2024’ என்ற புதிய விதியின்படி, கிராமப்புறங்களில் செயல்படும் அனைத்து சிறு கடைகள், தள்ளுவண்டி கடைகள், இட்லி, டீ கடைகள் உட்பட 151 வகையான தொழில்களுக்கு வணிக உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 மற்றும் ஆண்டு உரிமக் கட்டணமாக ரூ.100 முதல் ரூ.5000 வரை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், “கிராமங்களில் பெட்டிக்கடை, இட்லி கடை, தேநீர் கடை நடத்தி அன்றாட வாழ்க்கையை நடத்தும் ஏழை, எளிய மக்களிடம் உரிமம் என்ற பெயரில் கட்டணம் வசூலிப்பது, அவர்களின் வயிற்றில் அடிக்கும் செயல். இது மறைமுகக் கொள்ளைக்கு சமம்” என்று கூறியுள்ளார். மேலும், நகர்ப்புறங்களில் வசூலிக்கப்படாத கட்டணத்தை கிராமப்புறங்களில் திணிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தவும், வணிகங்களை முறைப்படுத்தவும் இந்த விதிகள் கொண்டுவரப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இது சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயல் என எதிர்ப்புகள் வலுக்கின்றன. எனவே, இந்த வணிக உரிமக் கட்டண விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, ஏழை எளிய மக்களை பாதிக்கும் இந்த புதிய விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.