ஒரே உத்தரவில் கூண்டோடு மாற்றம், கலக்கத்தில் சார்-பதிவாளர்கள்

தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நிர்வாக நலன் கருதி, நூற்றுக்கணக்கான சார்-பதிவாளர்களை பணியிடமாற்றம் செய்து பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த திடீர் பணியிடமாற்றம், பதிவுத்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பத்திரப்பதிவு சேவைகளில் மாற்றங்களை கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் 110-க்கும் மேற்பட்ட சார்-பதிவாளர்கள் (கிரேடு-1 மற்றும் கிரேடு-2) நிர்வாக காரணங்களுக்காக அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் புகார்களுக்கு உள்ளானவர்கள் இந்த இடமாற்றப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பணியிட மாற்றங்கள், பதிவுத்துறை சேவைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், பணிகளை வேகப்படுத்தவும் உதவும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர்கள் உடனடியாக தங்களது புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பத்திரப்பதிவு அலுவலகங்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த மெகா பணியிட மாற்றங்கள், பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் விரைவான சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய இடங்களில் பொறுப்பேற்கும் அதிகாரிகள், பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார்கள் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் லஞ்ச, லாவண்ய புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.