இந்தியாவின் முக்கிய அடையாள அட்டையான ஆதார், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அவசியமாகிவிட்டது. உங்கள் குழந்தையின் வயது 5-ஐ நெருங்கிவிட்டதா? அப்படியானால், அவர்களின் ஆதார் அட்டையில் ஒரு முக்கிய அப்டேட்டை உடனடியாகச் செய்ய வேண்டும். இந்த ‘பயோமெட்ரிக் அப்டேட்’ ஏன் அவசியம், இதை எப்படிச் செய்வது என்பது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை ‘பால் ஆதார்’ (Baal Aadhaar) என்று அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் இருக்கும். குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழிப் பதிவுகள் 5 வயது வரை நிலையாக இருக்காது என்பதால், இந்த ஆதார் அட்டையில் அவர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. மாறாக, பெற்றோரின் ஆதார் விவரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
உங்கள் குழந்தைக்கு 5 வயது பூர்த்தியானதும், அவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை (10 கைரேகைகள் மற்றும் 2 கருவிழிகள்) ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். இது ‘கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்’ (Mandatory Biometric Update) எனப்படுகிறது. இந்த அப்டேட்டை செய்யாவிட்டால், குழந்தையின் ஆதார் செயலிழந்துவிடும் அபாயம் உள்ளது. இது பள்ளிச் சேர்க்கை மற்றும் அரசு நலத்திட்டங்களைப் பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
இந்த பயோமெட்ரிக் அப்டேட்டைச் செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இது முற்றிலும் இலவசமான சேவையாகும். நீங்கள் உங்கள் குழந்தையை, அவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் உங்கள் ஆதார் அட்டையுடன் அருகிலுள்ள ஆதார் சேவை மையம், தபால் அலுவலகம் அல்லது வங்கிகளுக்கு அழைத்துச் சென்று எளிதாக இந்த அப்டேட்டைச் செய்து முடிக்கலாம். இதற்கு எவ்வித படிவமும் நிரப்பத் தேவையில்லை.
ஆகவே, 5 முதல் 7 வயதுக்குள் இருக்கும் உங்கள் குழந்தைகளின் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை தாமதமின்றிப் புதுப்பிப்பது மிகவும் அவசியம். இது அவர்களின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒரு முக்கிய படியாகும். இந்த இலவச சேவையைப் பயன்படுத்தி, உங்கள் குழந்தையின் ஆதார் எண்ணைச் செயலிழக்காமல் பாதுகாத்து, தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்த்திடுங்கள்.